அறுவடை செய்த நெல் மழையில் நனைந்ததால் விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் கவலையடைந்துள்ளார்கள்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பு வருட சாகுபடி செய்யப்பட்ட குருவை நெற்பயிர்களில் இதுவரை 85 சதவீதம் அறுவடை பணி நிறைவடைந்து இருக்கின்றது. அறுவடை செய்த நெல்லை விவசாயிகளிடம் இருந்து வாங்குவதற்காக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றது. அறுவடை செய்ததில் விற்பனை செய்வதற்காக விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குவித்து வருகின்றார்கள். இந்த நிலையில் சென்ற சில நாட்களுக்கு முன்பு செய்த கனமழையால் நெல்மணிகள் ஈரமானது.
ஏற்கனவே 17 சதவீத ஈரப்பதம் அளவு இருந்தால் மட்டுமே கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பதால் ஈரமான நெல்லை விவசாயிகள் விற்பனை செய்ய முடியாமல் சிரமத்திற்கு உள்ளானார்கள். இடையில் மழை சற்று ஓய்ந்து வெயில் அடித்ததால் ஈரமான நெல்லை சாலையில் கொட்டி காய வைக்கும் பணியில் ஈடுபட்டார்கள். 17 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை விவசாயிகள் விற்பனை செய்த நிலையில் தஞ்சையில் சென்ற இரண்டு நாட்களாக மீண்டும் மழை பெய்து வருகின்றது. இதனால் அறுவடை செய்யப்பட்டு கொள்முதலுக்காக குவிக்கப்பட்ட நெல்மணிகள் நனைந்து ஈரப்பதம் மேலும் அதிகரித்து இருக்கின்றது. இதனால் விவசாயிகள் கொள்முதலில் 22 சதவீத ஈரப்பதம் வரை தளர்வு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்கள்.