ஆரணி பேருந்து நிலையம் அடிப்படை வசதிகளின்கூடிய புதிய பேருந்து நிலையமாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணியில் பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்களின் மூலம் நகராட்சிக்கு அதிக வருவாய் கிடைத்தும் பயணிகளுக்கு எவ்வித அடிப்படை வசதிகளும் செய்யாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றார்கள். பயணிகள் அமர்வதற்கு போதிய இட வசதி இல்லை. குடிநீர் குழாய்கள் அமைத்தும் தண்ணீர் வருவதில்லை.
மேலும் இலவச கழிப்பறை வசதி கூட இல்லை. கட்டண கழிப்பிடத்தில் அதிக வசூலிப்பதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றார்கள். மேலும் பயணிகள் அமர்வதற்கு அமைக்கப்பட்டுள்ள இருக்கைகளில் வியாபாரிகள் கடை விரித்து ஆக்கிரமிப்பு செய்து விடுகின்றார்கள். இதை அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை. மேலும் நகராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையமாக மாற்ற வேண்டும் என்பதே மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கின்றது.