பணகுடி அருகே ஓடை வெள்ளத்தில் சிக்கிய 8 பேர் மீட்கப்பட்ட நிலையில் 2 பேரை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பணகுடி அருகே குத்தரப்பாஞ்சான் அருவி இருக்கின்றது. இங்கு சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வந்தது. இந்த நிலையில் அருவியில் கூடங்குளம், கூத்தன்குடி, பணகுடி, கன்னியாகுமாரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது கனமழை காரணமாக ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் வெவ்வேறு திசைகளில் ஓடி மாற்று திசையில் கரைச் சேர்ந்தார்கள்.
ஆனால் 10 பேர் மட்டும் வெள்ளப்பெருக்கில் சிக்கிக் கொண்டார்கள். இது குறித்து போலீசாருக்கும் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டது. பின் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டார்கள். இதில் எட்டு பேரை தீயணைப்பு படையினர் மீட்டார்கள். ஆனால் விநாயகம், சரவணன் உள்ளிட்ட இரண்டு பேர் மட்டும் மாயமானார்கள். இவர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இருக்கலாம் என சொல்லப்படுகின்றது. இரண்டு பேரையும் தீவிர தேடுதம் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.