மொய்ப்பண தகராறில் உறவினரை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெரியபேட்டையை சேர்ந்த நாராயணன் என்பவரின் மகள் திருமணம் உசிலம்பட்டியில் நடைபெற்றது. இதன்பின் வரவேற்பு சென்ற ஜூன் 29ஆம் தேதி 2015 ஆம் வருடம் விருதுநகரில் நடந்தது. திருமண வரவேற்பின் போது மொய்ப்பணம் வசூலை நாராயணன் அவரது மனைவி முத்துலட்சுமியிடம் தன்னிடம் தருமாறு கேட்டு இருக்கின்றார். அப்போது நாராயணனின் உறவினர் கருப்பசாமி முத்துலட்சுமியிடம் மொய் பணத்தை கொடுக்க வேண்டாம் என கூறியுள்ளார்.
இதனால் கருப்பசாமிக்கும் நாராயணனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதில் நாராயணனை கருப்பசாமி கீழே தள்ளி விட்டார். இதன்பின் வரவேற்பு நடந்த மண்டபத்தை விட்டு கருப்பசாமி வெளியே வந்த போது நாராயணன் அவரை தச்சு உளியால் சரமாரியாக குத்தியிருக்கின்றார். இதில் பலத்த காயமடைந்த அவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்கள். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நாராயணனை கைது செய்து வழக்கு தொடர்ந்தார்கள். இவ்வழக்கானது நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் விசாரணை செய்த நீதிபதி நாராயணனுக்கு ஆயுள் தண்டனையும் 5000 அபராதமும் விதித்தார்.