தள்ளாத வயதிலும் சைக்கிளில் சென்று கிராம மக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் 87 வயது மருத்துவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் பல்லார்ஷா, முல் மற்றும் பம்பார்னா வட்டங்களில் உள்ள 10 கிராமங்களுக்கு 87 வயதான ராம்சந்திர தண்டேகர் என்பவர் 60 வருடங்களாக சைக்கிளில் பயணம் செய்து இலவச மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறார். தற்போது முல் கிராமத்தில் தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கும் பலருக்கு இவர் சிகிச்சை கொடுத்து வருகிறார். ஆயுர்வேத மற்றும் ஹோமியோபதி மருத்துவரான இவர் கொரோனா காலத்திலும் எந்த ஒரு சோர்வு இல்லாமல் தொடர்ந்து மருத்துவம் பார்க்கிறார்.
சிறிய குக்கிராமங்களுக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய மருத்துவ உதவிகளை செய்வதில் ராம்சந்திர தண்டேகர் பேரார்வம் கொண்டுள்ளார். ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று அனைத்து மக்களையும் பார்க்கிறார். தினமும் 10 கிலோ மீட்டர் குறையாமல் சைக்கிளில் பயணம் செய்யும் ராமச்சந்திர தண்டேகர் கூறுகையில் “எனது தினசரி பணிகள் எப்போதும் போல் இருக்கிறது. எனது தன்னலமற்ற சேவையை தொடர விரும்புகின்றேன்” என கூறுகிறார்.
1957 ஆம் வருடம் ஹோமியோபதி கல்லூரியில் டிப்ளமோ பட்டம் பெற்ற இவர் பேராசிரியராக பணிபுரிந்தார். ஆனால் அடுத்த சில வருடங்களில் கிராமத்தில் இருக்கும் மக்கள் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் இருப்பதை அறிந்து இலவச சேவை செய்ய தொடங்கினார். திங்கள் முதல் வெள்ளி வரை அட்டவணை போட்டு அனைத்து கிராமங்களுக்கும் சென்று சிகிச்சை பார்க்கிறார். தன்னுடன் மருந்துகளை எடுத்துச் செல்லும் இவர் கைக்கடிகாரமோ அல்லது மொபைல் போனை வைத்துக்கொள்ளவில்லை.
அவரது மூத்த மகன் ஜெயந்த் தண்டேகர் கூறுகையில் “ஒரு நாள் அவர் கிராமங்களுக்கு செல்லவில்லை என்றாலும் டாக்டர்.. எங்க ஊருக்கு வாங்க என்று கிராம மக்களிடம் இருந்து அழைப்பு வந்துவிடும்” என கூறியுள்ளார் கிராமத்திலிருந்து திரும்புவதற்கு கால தாமதம் ஆனால் கிராம மக்கள் அவர்களது வீட்டில் ராமச்சந்திர தண்டேகரை தங்க வைத்துக் கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.