தமிழகத்தில் அதிகரித்துக்கொண்டே செல்லும் உயிரிழப்பு மக்களை பதறவைத்துக்கொண்டு இருக்கின்றது.
தமிழகம் முழுவதும் நேற்று 37 மாவட்டங்களில் கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு 32 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது மக்களை அதிர வைத்துள்ளது. நேற்றுவரை 2,90,907 பேர் பாதிக்கப்பட்டு இந்த எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கு கின்றது. அதே போல 2,32,618 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். தற்போது வரை மருத்துவமனையில் 53,481 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக அதிகரித்துக்கொண்டு சென்ற உயிரிழப்பு தற்போது உச்சம் பெற்றுள்ளது.
தினமும் 100க்கும் அதிகமான எண்ணிக்கையில் கொரோனா உயிரிழப்பு பதிவாகியுள்ளது. நேற்று மட்டும் 118 பேர் உயிரிழந்துள்ளதால் கொரோனா உயிரிழப்பு 4,808 ஆக அதிகரித்துள்ளது. இந்தியளவில் கொரோனா பாதிப்பிலும் சரி, உயிரிழப்பிலும் சரி தமிழகம் இரண்டாவது இடத்தில உள்ளது. அதே நேரம் அதிக பரிசோதனை செய்த மாநிலமாக நாட்டிலே முதலிடத்தில் இருக்கும் தமிழகம் கொரோனா சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் எண்ணிக்கையில் 4ஆம் இடத்தில உள்ளது.
இப்படியாக மக்களை காப்பாற்ற கூடிய ஆக்கப்பூர்வமான பல விஷயங்களை தமிழகம் செய்து கொரோனாவுக்கு எதிராக வலுவாக போராடுகிறது. இருந்தும் உயிரிழப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து உயர்ந்து வண்ணம் இருப்பது வேதனையாக பார்க்கப்படுகிறது. கடந்த 8 நாட்களில் 873 மரணம் அடைந்து இருப்பது தமிழக மக்களை பதற வைத்துள்ளது.