கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஊரை காலி செய்துவிட்டு ஆட்சியர் அலுவலகத்தில் குடியேற சென்றார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை கிராமத்தைச் சுற்றி 6 கல் குவாரிகள் இயங்கி வருகின்றது. இந்த குவாரிகளில் இருந்து எம்.சாண்ட், ஜல்லிக்கற்கள் கொட்டைகிரி கிராமத்திற்குள் செல்வதால் சாலைகள் பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகின்றது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார்கள். இதனால் இக்கிராமத்தின் வழியாக லாரிகள் செல்லக்கூடாது என தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இதற்கு அதிகாரிகள் தலைமையில் சமாதான கூட்டங்கள் நடத்தப்பட்டு தீர்வு காணவில்லை. இங்கே லாரிகள் வேகமாக செல்வதால் பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயக்கம் காட்டுகின்றார்கள். இந்த நிலையில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்காத காரணத்தால் நூறுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வீடுகளை காலி செய்து மூட்டை, முடிச்சுகளுடன் குழந்தைகள் மற்றும் ஆடு மாடுகளை அழைத்து கொண்டு ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
கொட்டும் மழையிலும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். பின் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கிராமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனால் கிராம மக்களுக்கு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசாருக்கும் கிராம மக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதன்பின் தகவலறிந்து வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிராமத்திற்குச் சென்று மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தியதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார். இதன் பின் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு விட்டு தங்களின் ஊருக்கு சென்றார்கள்.