பாடலாசிரியர் சினேகனுக்கு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
பாடலாசிரியர் சினேகன் தான் நடத்தி வரும் சினேகம் அறக்கட்டளை பெயரை பயன்படுத்தி நடிகை ஜெயலட்சுமி பணம் வசூலிப்பதாக காவல் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இதுபோல நடிகை ஜெயலட்சுமியும் தான் தனியாக அறக்கட்டளை நடத்தி வருவதாகவும் அதன் மூலம் வசூலிக்கப்படும் பணத்தில் பல சமூகப் பணிகளை செய்வதற்காக பயன்படுத்துவதாகவும் எனது புகழுக்கு களங்கம் விளைவிக்க சினேகன் பொய் புகார் தெரிவிப்பதாக புகார் கொடுத்தார்.
சினேகன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் சினேகன். இதன்பின் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி ஜெயலட்சுமி மீது திருமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்தார்கள்.
இந்த நிலையில் ஜெயலஷ்மி அளித்த புகாரின் பேரில் தன்னை கைது செய்யக்கூடாது என சினேகன் முன் ஜாமீன் கேட்டு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு முன் ஜாமின் வழங்க உத்தரவிட்டது. மேலும் திருமங்கலம் காவல் நிலையத்தில் ஆஜராகி தினமும் கையெழுத்திட வேண்டும் எனவும் சாட்சிகளை கலைக்க கூடாது எனவும் நிபந்தனை விதித்து உத்தரவிட்டது.