பனாரஸ் திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கு பார்க்கலாம்.
கன்னட சினிமா உலகின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஜெய தீர்த்தா இயக்கத்தில் புதுமுக நடிகர் ஜையீத் கான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பனாரஸ். இப்படத்தில் ஹீரோயினாக நடிகை சோனல் மோன்டோரியோ நடித்துள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் தேவராஜ், அச்சுத்குமார், சுஜய் சாஸ்திரி, பரக்கத் அலி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள்.
இத்திரைப்படத்திற்கு அஜனனீஷ் லோக்நாத் இசையமைக்க என்.கே புரோடக்சன்ஸ் தயாரித்துள்ளது. இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நவம்பர் மாதம் 4-ம் தேதி திரையரங்கில் வெளியாகி உள்ளது.
படத்தில் ஹீரோ செல்வந்தர் குடும்பத்தின் மகன். இவர் கல்லூரியில் படித்து வருகின்றார். ஹீரோயின் பெற்றோரை இழந்தவர். இவர் எளிதில் அனைவரையும் நம்பி விடுவார். திடீரென ஒரு நாள் ஹீரோ ஹீரோயினிடம் நான்தான் உன் கணவர் என்றும் எதிர்காலத்தில் இருந்து வருவதாகவும் நமக்கு ஒரு மகள் இருப்பதாகவும் இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என கூறுகின்றார். இதை ஹீரோயின் நம்பி ஹீரோவை தன் அறையில் தங்க வைக்க இடம் தருகின்றார்.
அப்போது இருவரும் நெருக்கமாக இருப்பது போல புகைப்படத்தை எடுத்து தனது நண்பர்களுக்கு ஹீரோ அனுப்புகின்றார். இந்த புகைப்படத்தால் அவமானம் தாங்க முடியாமல் ஹீரோயின் பனாரஸிற்கு சென்று விடுகின்றார். ஒரு கட்டத்தில் தனது தவறை உணர்ந்த ஹீரோ தந்தையின் அறிவுரையின் படி பனாரஸிற்கு ஹீரோயினை சந்திப்பதற்காக செல்கின்றார். இதன்பின் அவர் ஹீரோயினை கண்டுபிடித்தாரா? அவரிடம் மன்னிப்பு கேட்டாரா? அதன் பின் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதி கதையாகும்.
இப்படத்தில் ஹீரோ அறிமுக நடிகர் என தெரியாத அளவிற்கு நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் கைதட்டலையும் பெற்றுள்ளார். ஆதரவற்ற காட்சிகள் மூலம் ஹீரோயின் அனுதாபத்தை ஏற்படுத்தி உள்ளார். மேலும் தனது கதாபாத்திரம் மூலம் அனைவரையும் ரசிக்கும் படி செய்து இருக்கின்றார். இயக்குனர் படத்தில் முதலில் கால சூழலில் ஆரம்பித்து இதன் பின் காதலையும் அறிவியலையும் கலந்த ஒரு புதிய திரைப்படமாக கொடுத்திருக்கின்றார். ஒளிப்பதிவும் நன்றாக அமைந்திருக்கின்றது. படத்திற்கு இசை பலம் சேர்த்துள்ளது. மொத்தத்தில் பனாரஸ் ஓர் காதல் ஓவியம்.