தொழிலதிபரின் வங்கி கணக்கிலிருந்து நூதன முறையில் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றார்கள்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள அண்ணாமலை நகர் பகுதியை சேர்ந்த சிபி என்பவர் காவேரி கேரேஜ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகின்றார். இவர் பாரத ஸ்டேட் வங்கி கிளையில் வங்கி கணக்கை வைத்திருக்கின்றார். இந்த நிலையில் சிபி வைத்திருக்கும் வங்கியின் மேலாளருக்கு சிபியின் இமெயிலில் இருந்து செய்தி ஒன்று வந்திருக்கின்றது. அதில் சிபியின் வங்கி கணக்கிலிருந்து வேறொருவர் வங்கி கணக்கிற்கு 23 லட்சம் அனுப்பி வைக்குமாறு சொல்லப்பட்டிருந்தது.
இதனால் வங்கி மேலாளரும் இமெயிலில் குறிப்பிட்டு இருந்த வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி வைத்திருக்கின்றார். இதைப்பற்றி தெரிந்த சிபி அதிர்ச்சி அடைந்து இது குறித்து வங்கி மேலாளரிடம் கேட்டு இருக்கின்றார். அப்போது மேலாளர் நடந்தவற்றை கூறியுள்ளார். இதையடுத்து சிபி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருக்கின்றார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 23 லட்சத்தை மோசடி செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றார்கள்.