தூத்துக்குடி-கோவை இடையே இரவு நேர ரயில் இயக்க வேண்டும் என தூத்துக்குடி வர்த்தக தொழிற்சங்கத்தினர் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்கள்.
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆலோசனையின் படி தூத்துக்குடியில் வர்த்தக தொழிற்சங்கத்தினர் சென்னை ரயில்வே அலுவலகத்திற்கு நேரில் சென்றார்கள். இதன் பின் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்கள். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, தூத்துக்குடி-கோவை இரவு நேர நேரடி ரயிலை இயக்க வேண்டும்.
தூத்துக்குடி துறைமுகம், கொச்சி துறைமுகம் இணைக்கும் வகையில் நெல்லை-பாலக்காடு-நெல்லை இடையேயான பாலக்காடு விரைவு ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும். மதுரை-புனலூர் விரைவு ரயில் கோவில்பட்டி, கடம்பூர் ரயில் நிலையங்களிலும் கொல்லம்-சென்னை-அனந்தபுரி விரைவு ரயில் வாஞ்சி-மணியாச்சி-கடம்பூர் ரயில் நிலையங்களிலும் நின்று செல்ல வேண்டும். தூத்துக்குடி ரயில் நிலையம் செல்லும் சாலை சிறியதாக இருப்பதால் கூடுதல் சாலையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்கள்.