செல்போன் தடை உத்தரவு மூன்று நாட்களில் முழுமையாக அமல்படுத்தப்படும் என அறங்காவலர் குழு தலைவர் கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பணியில் இருந்தபோது பட்டாணி முத்து என்பவர் உயிரிழந்து விட்டார். கருணை அடிப்படையில் இவரின் மகனுக்கு அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன் பணியமன ஆணையை வழங்கினார். இதன்பின் அவரிடம் செய்தியாளர்கள், கோவிலுக்குள் செல்போன் பயன்படுத்த ஐகோர்ட் தடை விதித்தது குறித்து கேட்டார்கள்.
அதற்கு அவர் கூறியுள்ளதாவது, முதலில் நீதிமன்ற உத்தரவை கோவில் வளாகங்களில் அறிவிப்பு பலகைகளாக வைத்து பக்தர்களுக்கு கூறப்படும். இந்த உத்தரவு மூன்று நாட்களில் முழுமையாக கோவிலில் அமல்படுத்தப்படும். மேலும் பக்தர்களின் செல்போன்களை பாதுகாப்பாக வைப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.
இதுபோல கோவிலுக்கு டி-ஷர்ட், ஜீன்ஸ், ஷார்ட்ஸ், லெக்கின்ஸ் உள்ளிட்டவை அணிந்து வருபவர்களுக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது. கோவில் நடை வழக்கம் போல் எல்லா நாட்களிலும் திறக்கப்பட்டு தான் இருக்கும். இணையத்தில் வரும் வதந்திகளை யாரும் நம்பாதீர்கள். சில வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சண்முகார்ச்சனை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றது எனக் கூறியுள்ளார்.