விழுப்புரம் காவல் நிலைய மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஆவணங்கள் சேதமடைந்தன.
விழுப்புரம் மாவட்டத்தில் நகரில் போக்குவரத்து காவல்துறை பல வருடங்களாக செயல்பட்டு வருகின்றது. மேற்கு போலீஸ் நிலையம், நகர போலீஸ் நிலையம், தாலுகா போலீஸ் நிலையம் உள்ளிட்டவை சொந்த கட்டிடங்களில் இயங்கி வருகின்ற நிலையில் போக்குவரத்து காவல்துறைக்கு மட்டும் சொந்த கட்டிடம் கட்டிக் கொடுக்காமல் தற்காலிக இடங்களில் செயல்பட்டு வருகின்றது.
தற்போது விழுப்புரம் நான்கு முனை சந்திப்பு அருகே இருக்கும் பழைய கட்டிடத்தில் போக்குவரத்து காவல் நிலையம் சென்ற ஆறு வருடங்களுக்கு மேலாக செயல்பட்டது. இந்த காவல் நிலையத்தில் 25க்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்றி வருகின்றார்கள். இங்கிருக்கும் கட்டிடம் மிகவும் பழுதடைந்து காணப்பட்டது. மேலும் மழைக்காலத்தில் அவ்வபோது கட்டிடத்தின் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்த வண்ணம் இருந்த நிலையில் புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என கோரிக்கை இருந்து வந்தது.
இந்த நிலையில் விழுப்புரத்தில் சென்ற சில நாட்களாக மழை பெய்து வந்ததன் காரணமாக காவல் நிலைய கட்டிடத்தின் சுவர்கள் மற்றும் மேல் தளம் தண்ணீரில் நனைந்து விரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் திடீரென கட்டிடத்தின் மேற்கூரை நள்ளிரவு நேரத்தில் இடிந்து விழுந்து உள்ளது. இதை பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தார்கள்.
அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படாமல் உயிர்த்தப்பினார்கள். ஆனால் காவல் நிலையத்தில் இருந்த ஆவணங்கள் மட்டும் சேதம் அடைந்துள்ளது. இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவரின் உத்தரவின்படி தற்காலிக நகர காவல் நிலையத்திற்கு போக்குவரத்து காவல் நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றது.