கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுமா? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பாக டவுன் பேருந்துகள் இயக்கப்படுகின்றது. இதுபோல பல்வேறு பகுதிகளுக்கும் பேருந்து இயக்கப்படுகின்றன. இதில் குறிப்பாக பழைய பேருந்து நிலையம் முதல் புதிய பேருந்து நிலையம், மருத்துவக் கல்லூரி, வல்லம் போன்ற பல பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளில் காலை 8 மணி முதல் 10 மணி வரையும் மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகின்றது.
இதனால் மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்கின்றார்கள். இது சில மாதங்களாகவே இப்படித்தான் நடக்கின்றது. மாணவர்களோ தொங்கியபடி பயணம் செய்து விடுகின்றார்கள். ஆனால் மாணவிகளின் நிலையோ கவலைக்கிடமாக இருக்கின்றது. புதிய பேருந்து நிலையங்களுக்கு பேருந்துகள் வந்ததும் மாணவ-மாணவிகள் ஓடிச்சென்று ஏறும் காட்சியை நம் தினமும் பார்க்கின்றோம். இதற்குக் காரணம் போதிய அளவு பேருந்து இயக்கப்படாதது என மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் கூறுகின்றார்கள்.
ஆனால் அதிகாரிகள் வழக்கம் போல் தான் பேருந்துகள் இயக்கப்படுவதாக கூறுகின்றார்கள். இதே நேரத்தில் வேலைக்கு செல்பவர்கள் அலுவலகங்களுக்கு செல்பவர்களும் பயணம் செய்வதால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. மேலும் பெண்களுக்கு இலவச பயணம் நடைமுறையில் இருப்பதால் பெண்கள் பேருந்து பயணத்தையே விரும்புகின்றார்கள். இந்த கூட்டத்திற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கின்றது. இது போன்ற ஆபத்தான பயணத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடப்பதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைத்து வித பயணிகளின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.