திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் மாணவ-மாணவிகளுடன் காபி வித் கலெக்டர் என்னும் தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று முன்தினம் பள்ளிக்கல்வித்துறை சார்பாக அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9-வது வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுடன் கல்வித்திறனை ஊக்கப்படுத்தும் விதமாக காபி வித் கலெக்டர் என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மாணவ-மாணவிகளுடன் உரையாடினார். அப்போது ஆட்சியர் கூறியதாவது, அன்றாடம் வகுப்பில் நடத்தப்படும் பாடங்களை நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம் என தள்ளி போடாமல் அன்றே பாடங்களை புரிந்து படித்து மனதில் நிறுத்த வேண்டும். மேலும் தினமும் படிப்பதற்காக நேரத்தை ஒதுக்கி திட்டத்தை வகுத்து படிக்கும் முறையை நாம் பின்பற்ற வேண்டும்.
இந்த பருவத்தில் தேவையற்ற பழக்கங்களுக்கு நாம் ஆளாகாமல் ஒழுக்கத்தோடு கல்வி கற்று தங்களின் வாழ்வை உயர்த்த வேண்டும். இந்த வயதில் நமக்கு இருக்க வேண்டிய ஒரே கடமை படிப்பு தான் என்பதை உணர்ந்து செயல்பட்டால் வாழ்வு நன்றாக இருக்கும். ஆகையால் சிறப்பாக செயல்பட்டு ஒளிமயமான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுரைகளை வழங்கினார். இதன்பின் மாணவ-மாணவிகளுக்கு புத்தகங்களை கொடுத்தார்.