மின் இணைப்பு பெறுவதற்காக லஞ்சம் கேட்ட அதிகாரிக்கு மூன்று வருட சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தேனி மாவட்டத்திலுள்ள உத்தமபாளையம் கல்லூரி சாலையைச் சேர்ந்த காசி விஸ்வநாதன் என்பவர் தனது விவசாய நிலத்தில் மின் இணைப்பு பெறுவதற்காக மின் பொறியாளர் அலுவலகத்தில் சென்று 2016 ஆம் வருடம் விண்ணப்பித்திருக்கின்றார். அப்போது அங்கு மின்வாரிய வணிக ஆய்வாளராக பணியாற்றிய குபேந்திரன் என்பவர் கள ஆய்வு செய்து மதிப்பீட்டு அறிக்கை கொடுப்பதற்கு ரூபாய் 5000 லஞ்சம் கேட்டிருக்கின்றார். அதற்கு காசி விஸ்வநாதன் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை எனக் கூறியிருக்கின்றார்.
இதனால் 4000 தருமாறு கேட்டு இருக்கின்றார். இதனால் காசி விஸ்வநாதன் வீட்டிற்கு சென்று பணம் எடுத்து வருவதாக கூறி லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு சென்று இது குறித்து கூறியுள்ளார். இதன் பின் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவரிடம் ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்து அனுப்பியுள்ளார்கள். அதை குபேந்திரனிடம் கொடுத்த போது லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவரை கையும் களவுமாக கைது செய்தார்கள். மேலும் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கானது ஜுடிஷியல் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் லஞ்சம் வாங்கிய குபேந்திரனுக்கு மூன்று வருட சிறை தண்டனையும் ரூபாய் 5000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.