பி.சுசீலா இந்திய திரையுலகில் பிரபல பாடகிகளில் ஒருவராக வலம் வருபவர். இவர் குரலுக்கு மயங்காத ரசிகர்களே இல்லை என கூறலாம். இவரது குரலில் வெளியான பாடல்கள் தற்போது வரை ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகின்றன. இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட ஒன்பது மொழிகளில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவர் 17,695 பாடல்களை தனியாக பாடியதற்காக கின்னஸ் புத்தகத்தில் இவரின் பெயர் இடம் பெற்று இருக்கின்றது.
இவர் தேசிய அளவில் ஐந்து முறை விருதும், பத்மபூஷண், கலை மாமணி, மாநில விருதுகள் உள்ளிட்டவைகளை வாங்கி இருக்கின்றார். இவர் இந்தியாவில் புகழ்பெற்ற அனைத்து இசையமைப்பாளர்களுடனும் இணைந்து பணியாற்றி இருக்கின்றார். இவர் குறிப்பாக டி.எம்.சௌந்தர்ராஜன் உடன் இணைந்து அதிக பாடல்களை பாடி இருக்கின்றார். இத்தனை புகழுக்கும் சொந்தக்காரரான பி.சுசீலா தனது 87-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகின்றார். இவர் இசைத் துறையில் அறிமுகமாகி 60 வருடங்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.