பாட்டவயலில் சாலையோரமாக அரசு பேருந்துகள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றார்கள்.
நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் அருகே பட்டவயலில் தமிழக-கேரள எல்லை இருக்கின்றது. தேவர்சோலை, நெலாக்கோட்டை, நடுக்காணி, தேவலாலா, பந்தலூர், உப்பட்டி,முக்கட்டி, பிதிர்காடு, பாட்டவயல், கல்பெட்டா, அய்யன்கொல்லிக்கு அரசு சார்பாக பேருந்துகள் இயக்கப்படுகின்றது. சுல்தான்பத்தேரியிலிருந்து பாட்டவயலுக்கு கேரளா அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றது.
இந்த நிலையில் பாட்டவயல் பகுதியில் இருக்கும் சாலையின் அகலம் குறைவாக இருப்பதால் அரசு பேருந்துகள் அய்யன்கொல்லி செல்லும் சாலையோரமாகவும் சுல்தான்பத்தேரி செல்லும் சாலையோரமாகவும் நிறுத்தப்படுகின்றது. இவ்வாறு சாலையோரமாக பேருந்துகள் அடிக்கடி நிறுத்தப்படுவதால் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகின்றது.
பாட்டவயலில் கூடலூர், பந்தலூர் செல்லும் பேருந்துகள் நிறுத்தும் இடத்தில் கிராம நிர்வாக அலுவலகம் அருகே குழி இருக்கின்றது. இந்த குழியில் வாகனங்கள் சிக்குவது மட்டுமல்லாமல் விபத்துகளும் ஏற்படுகின்றது. இதனால் பேருந்துகளை திருப்புவதற்கு போதிய இடவசதி இல்லை. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மட்டுமல்லாமல் பயணிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றார்கள்.