கைது செய்யப்பட்டவர்களின் வாக்கீடாக்கியில் போலீஸ் அலைவரிசை இணைத்தது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக நெல்லை சரக டிஐஜி கூறியுள்ளார்.
திருநெல்வேலி சரக டிஐஜி பிரவேஷ்குமார் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது கூறியுள்ளதாவது, தூத்துக்குடி மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுப்பதற்காக தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றது. மாவட்டத்தில் இதுவரை 238 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். நடப்பு வருடத்தில் கஞ்சா விற்பனை வழக்குகள் மட்டும் 149 பதிவு செய்யப்பட்டு 286 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
மேலும் அவர்களிடமிருந்து 679 கிலோ கஞ்சா மற்றும் 5 கிலோ கஞ்சா எண்ணெய், 50 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றது. கஞ்சா விற்பனை குறித்து தகவல் அறிந்தால் போலீசுக்கு தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். புகார் கொடுப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். தூத்துக்குடியில் போலி போதை பொருள் வைத்திருந்தவர்களிடமிருந்து இரண்டு வாக்கி டாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. அதில் போலீஸ் அலைவரிசை கிடைத்திருப்பதால் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றோம்.
அந்த வாக்கி டாக்கியில் எப்படி போலீசின் அலைவரிசையை இணைத்தார்கள். இதில் போலீசாருக்கு ஏதேனும் தொடர்பு இருக்கின்றதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றோம். தூத்துக்குடியில் ஆம்னி பேருந்து மீது பெட்ரோல் கொண்டு வீசப்பட்டது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் எந்த தடயங்களும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றோம். இந்த வழக்கு தற்போது சிபி சிஐடிக்கு மாற்றப்பட்டு இருக்கின்றது என தெரிவித்துள்ளார்.