இருளர் இனத்தைச் சேர்ந்த பெண்கள் பலாத்கார வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே இருக்கும் டி.மண்டபம் கிராமத்தில் திருட்டு வழக்கு தொடர்பாக பழங்குடி இருளர் இனத்தைச் சேர்ந்த கர்ப்பிணி உள்பட நான்கு பெண்களை போலீசார் சென்ற 2011 ஆம் வருடம் நவம்பர் மாதம் 22ஆம் தேதி போலீஸ் வேனில் அழைத்துச் சென்றார்கள். ஆனால் செல்லும் வழியில் ஒரு தைலம் மர தோப்பில் வைத்து நான்கு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக சொல்லப்படுகின்றது. இதுகுறித்து நான்கு பெண்களும் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தார்கள்.
இதையடுத்து பல பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தார்கள். இதில் குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சிறப்பு இன்ஸ்பெக்டர் ராமநாதன், ஏட்டு தனசேகரன், போலீஸ்காரர்கள் பகவத்சலம், கார்த்திகேயன் உள்ளிட்டோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்கள். இந்த வழக்கில் சிறப்பு இன்ஸ்பெக்டர் ராமநாதன், ஏட்டு தனசேகரன், போலீஸ்காரர்கள் பகவத்சலம், கார்த்திகேயன் உள்ளிட்ட நான்கு பேருக்கு ஏற்கனவே ஜாமீன் கிடைத்த நிலையில் இன்ஸ்பெக்டர் சீனிவாசனுக்கு மட்டும் ஜாமீன் கிடைக்கவில்லை.
இதனால் அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில் நீதிமன்றம் அவருக்கு பிடிவாரெண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. இதனிடையே பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காலம் முடிவடைந்ததால் அவர் அரக்கோணம் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். அப்போது அவரை திருக்கோவிலூர் போலீசார் தேடுவதை அறிந்து கொண்டு மருத்துவ விடுப்பு எடுத்து தலைமறைவாக இருந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் காலை விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார். மேலும் ஜாமீன் வழங்குமாறு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி இன்ஸ்பெக்டர் சீனிவாசனை கைது செய்து வருகின்ற 21 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார். இதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சீனிவாசனை திருக்கோவிலூர் போலீசார் கைது செய்தார்கள்.