தூத்துக்குடியில் ஊர்க்காவல் படையினருக்கு ஆயுதப்படையில் பயிற்சி விழா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட கடலோர பாதுகாப்பு போலீசாருடன் சேர்ந்து பணியாற்ற மீனவர் இளைஞர்கள் 22 பேர் தமிழ்நாடு அரசு உத்தரவின்படி தேர்வு செய்யப்பட்டார்கள். இவர்களுக்கு 45 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றுடன் நிறைவு பெற்றது. இதை தொடர்ந்து பயிற்சி பெற்ற 22 ஊர்க்காவல் படையினரும் கடலோர பாதுகாப்பு காவல் படையினருடன் சேர்ந்து பணியாற்றி இருக்கின்றார்கள்.
நேற்று பயிற்சி நிறைவு பெற்ற ஊர்க்காவல் படையினரை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டுகளை தெரிவித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, 45 நாட்கள் சிறந்த முறையில் பயிற்சி பெற்றிருக்கும் நீங்கள் பாராட்டுக்குரியவர்கள். நீங்கள் குறுகிய காலத்தில் சிறந்த முறையில் பயிற்சி பெற்றிருப்பது ஊர்க்காவல் படையின் மீது கொண்டிருக்கும் ஆர்வத்தை காட்டுகின்றது. சீருடை அணிந்து சமுதாயத்திற்கு நன்மைகளை செய்ய உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. இதனை பயன்படுத்தி சிறப்பாக பணியாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.