ஸ்ரீவைகுண்டம் அருகே வேளாண்மை கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள கோட்டைக்காடு விஜயமங்கலத்தைச் சேர்ந்த நவீன்ராஜ் என்பவர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் அருகே இருக்கும் அரசு வேளாண்மை கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வந்தார். விடுதியில் தங்கி பயின்று வரும் இவர் சென்ற தீபாவளி விடுமுறையின் போது தனது சொந்த ஊர் ஈரோடுக்கு சென்று விட்டு சென்ற ஒரு வாரத்திற்கு முன்பாக கல்லூரிக்கு வந்தார். ஊருக்கு சென்று இருந்த போது, அவர் வீட்டில் இருப்பவர்களிடம் தனக்கு படிக்க விருப்பமில்லை எனக் கூறியிருக்கின்றார்.
இதனால் குடும்ப உறுப்பினர்கள் அவரை சமாதானப்படுத்தி மீண்டும் கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளார்கள். இந்த நிலையில் மனமுடைந்து காணப்பட்ட நவீன் ராஜ் நேற்று முன்தினம் கல்லூரி விடுதி அறையில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். மேலும் இதுக்குறித்து வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.