தமிழகத்தில் கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த மரணத்தில் யார் குற்றம் செய்திருந்தாலும் அவர்களுக்கு தக்க தண்டனை வழங்கப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, மாணவி பிரியாவுக்கு கால் அகற்றப்பட்டதில் 2 மருத்துவர்கள் கவனக்குறைவாக செயல்படுவது தெரிய வந்ததால் உடனடியாக அவர்கள் இருவரையும் இடமாற்றம் செய்தோம்.
அதன்படி ஒருவர் தூத்துக்குடிக்கும் மற்றொருவர் நெல்லைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டார். அதன் பிறகு மாணவி பிரியாவின் மரண அறிக்கையிலும் மருத்துவர்கள் தவறு செய்திருப்பது உறுதியானது. இந்நிலையில் மாணவி உயிரிழப்பதற்கு முன்பாக நான் அவரை சந்தித்து பேசியதோடு அரசு வேலை மற்றும் பேட்டரி கால் போன்றவற்றை வாங்கி தருவதாக உறுதி அளித்திருந்தேன். ஆனால் நான் பேசிய அன்றைய தினத்தின் இரவிலே மாணவி பிரியா உயிரிழந்தார்.
நான் உடனடியாக மருத்துவமனைக்கு சென்ற போது பிரியாவின் பெற்றோர் உடற்கூறாய்வு வேண்டாம் என்று கூறினார்கள். நான் தான் அவர்களை சமாதானப்படுத்தி உடற்கூறாய்வு செய்வதற்கு ஒப்புக்கொள்ள வைத்தேன். ஏனெனில் பிரேத பரிசோதனை அறிக்கையில் தான் மாணவி உயிரிழந்த உண்மையான விவகாரம் தெரிய வரும். மேலும் மாணவி பிரியாவின் மரணத்தில் யாரெல்லாம் கவனக்குறைவாக செயல்பட்டார்களோ அவர்கள் மீதெல்லாம் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.