கண் கலங்கிய இயக்குனருக்கு சன்னிலியோன் ஆறுதல் கூறியுள்ளார்.
டி.எம்.ஜெயமுருகன் இயக்கி இசையமைத்து தயாரித்து வரும் திரைப்படம் தீ இவன். இத்திரைபடத்தில் ஹீரோவாக கார்த்திக் நடிக்க ராஜா ரவி, சுமன், சிங்கம்புலி, இளவரசு, சுகன்யா என பலர் நடிக்கின்றார்கள். படபிடிப்பு இடைவேளையில் படக்குழு பத்திரிக்கையாளர்களை சந்தித்தது. அப்போது பட இயக்குனர் கூறியுள்ளதாவது, ஹீரோவின் முழு பரிமாணத்தையும் இத்திரைப்படத்தில் பயன்படுத்தி உள்ளேன். ஒரு இடைவேளைக்குப் பிறகு கார்த்திக்குக்கு இந்தப்படம் திருப்புமுனையாக இருக்கும் என நம்புகின்றேன்.
நமது தமிழ் சமூகம் கலை, கலாச்சாரம் உறவுகளோடு கட்டமைக்கப்பட்டது. உலக நாடுகளில் நமது கலாச்சாரத்தை வியந்து பார்க்கின்றார்கள். அப்படிப்பட்ட நமது கலாச்சாரம் தற்போது சீரழிக்கப்பட்டு வருகின்றது. இது போன்ற வருங்காலத்தில் இன்றைய தலைமுறையினரின் பின்னடைவுக்கு காரணமாக அமைந்துவிடக் கூடாது என்ற கருத்தை வலியுறுத்தி இத்திரைப்படத்தை எடுத்து இருக்கின்றேன். இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு சன்னிலியோன் நடனமாடியுள்ளார்.
அவரை மும்பையில் சந்தித்து நான் கதையை கூறிய போது தமிழ் கலாச்சாரத்தை காப்பது போன்று கதை இருக்கும் படத்தில் நான் நடிப்பதை மகிழ்ச்சியுடன் எண்ணுகின்றேன் என கூறினார். இத்திரைப்படத்தின் பட்ஜெட் என்ன? நடிகர்கள் யார்? என எதையுமே பார்க்காமல் கதைக்காக அவர் ஒத்துக் கொண்டது, அவரின் நல்ல மனசை காட்டுகின்றது. இப்போது இருக்கும் தமிழ் சினிமா நடிகர் மற்றும் நடிகைகள் ஒரு திரைப்படத்தில் நடிக்க சம்மதித்த பிறகு எப்படி எல்லாம் சேட்டை செய்கின்றார்கள்.
இதனால் தயாரிப்பாளர்கள் எவ்வளவு உடைந்து போகின்றார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவர் எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து இருக்கின்றார். அதற்காக நன்றி சொல்கின்றேன் என பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென ஜெயமுருகன் கண் கலங்கினார். அப்போது அவரை சன்னிலியோன் ஆறுதல் படுத்தினார். இது அங்கிருந்தவர்களை நெகிழ வைத்தது.