விருத்தாச்சலத்தில் திருட்டு போன மோட்டார் சைக்கிளை நாகையில் இருக்கும் போலீஸ்காரர் ஓட்டி வருகின்றார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலம் அருகே இருக்கும் வேட்டைகுடி பகுதியை சேர்ந்த வெற்றிவேல் என்பவர் தஞ்சை சரக டிஐஜியிடம் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, சென்ற 2018 ஆம் வருடம் ஜூலை 7ஆம் தேதி சிவப்பு நிறத்தில் மோட்டார் சைக்கிள் வாங்கி ஓட்டி வந்த நிலையில் சென்ற 2021 ஆம் வருடம் டிசம்பர் 10ஆம் தேதி விருத்தாச்சலத்தில் உள்ள சாவடி குப்பத்தில் இருக்கும் எனது அண்ணன் வீட்டின் எதிரே மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தேன்.
மறுநாள் காலை எழுந்து பார்த்த போது எனது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதனால் காவல் நிலையத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டு போனது குறித்து புகார் கொடுத்திருந்தேன். இந்நிலையில் சென்ற மாதம் எனது செல்போன் எண்ணிற்கு நாகை காவல் நிலையத்தில் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகன ஓட்டியதால் ரூபாய் 100 அபராதம் கட்ட வேண்டும் என செய்தி வந்தது.
இதன் பின் எனது நண்பர்களுடன் நாகைக்கு சென்று சில நாட்கள் மோட்டார் சைக்கிளை தேடி வந்தபோது அங்கிருக்கும் காவல் நிலையத்தில் போலீஸ் ஆக வேலை பார்ப்பவர் எனது மோட்டார் சைக்கிளை வைத்திருந்ததும் அவர் சிறுவன் ஒருவனுடன் அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றதும் தெரிந்தது. அவர் போலீஸ் என்பதால் அவரிடம் இது குறித்து கேட்க பயமாக இருக்கின்றது. ஆகையால் தாங்கள் உரிய நடவடிக்கை எடுத்து எனது மோட்டார் சைக்கிளை மீட்டு தர வேண்டும் என கூறியிருக்கின்றார். இதனால் டிஐஜி இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டிருக்கின்றார்.