சொத்து வரி வசூலித்த விவகாரத்தில் பெண் அதிகாரியை நகராட்சி அலுவலகத்திற்குள் புகுந்து மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திருக்கின்றது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தில் இருக்கும் மயிலம் சாலையில் ஒரு திருமண மண்டபத்திற்கான சொத்துவரி 1,39,832 ரூபாய் நகராட்சிக்கு செலுத்தாமல் இருக்கின்றது. இந்த வரியை வசூலிப்பதற்காக நகராட்சி மேலாளர் சந்திரா தலைமையிலான வருவாய் உதவியாளர்கள் மற்றும் அலுவலர்கள் மண்டபத்திற்கு சென்ற போது அங்கிருந்தவர்கள் ஆபாச வார்த்தைகளால் திட்டி அவர்களை பணி செய்யாமல் தடுத்தார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் 20-க்கும் மேற்பட்டோர் அலுவலகத்திற்கு வந்து சந்திரா மற்றும் அங்கிருந்த அலுவலர்களிடம் திட்டி ஆபாசமாக மிரட்டல் விடுத்ததாக சொல்லப்படுகிறது.
இது குறித்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் காவல் நிலையத்தில் சந்திரா புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் மண்டப உரிமையாளர் மூர்த்தி சங்கரன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். இதுபோல திருமண மண்டப தரப்பிலிருந்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டிருக்கின்றது. அதில் நகராட்சி மேலாளர் சந்திரா கையூட்டு கேட்டதாகவும் நகராட்சி அலுவலர்களை வைத்து மிரட்டல் விடுத்ததாகவும் கூறியிருக்கின்றனர். இதனால் போலீஸ் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.