நண்பர் இறந்த சோகத்தில் இருந்த முதியவர் பேருந்தில் அடிபட்டு உயிரிழந்துள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளி ரோடு மண்ணரை பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியம் என்பவர் திருப்பூர் பேருந்து நிலையம் அருகே இருக்கும் ஹோட்டலில் காசாளராக வேலை செய்து வந்தார். இவர் தினமும் ண்ணரை பகுதியில் நடைப்பயிற்சிக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் நடைப்பயிற்சிக்கு சென்ற அவர் பாரப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே ரோட்டை கடந்து சென்ற போது திருப்பூரில் இருந்து ஈரோடு சென்ற தனியார் பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது தனியார் பேருந்து முன்பாக பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்ததில் சுப்ரமணியம் சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென ரோட்டை கடக்கும் போது பேருந்து முன் கீழே விழுந்ததில் அவர் மீது பேருந்து ஏறியது தெரிய வந்தது.
இது குறித்து போலீசார் மேலும் விசாரணை செய்வதில் சுப்பிரமணியன் தனது நெருங்கிய நண்பரான பாரப்பாளையத்தைச் சேர்ந்த சுப்ரமணியத்துடன் தினமும் நடைபயிற்சி செல்வார். சென்ற வாரம் அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவர் இறந்த சோகத்தில் இருந்ததாக சொல்லப்படுகின்றது. இந்த நிலையில் நடை பயிற்சிக்குச் சென்று அவர் மனமுடைந்து பேருந்து முன் படுத்து தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை கால் தடுமாறி கீழே விழுந்தபோது பேருந்து ஏறியதா? என தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.