கல்லூரி விடுதியில் மூன்றாவது மாடியில் இருந்து நர்சிங் மாணவி குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
தேனி மாவட்டத்திலுள்ள உத்தமபாளையம் அருகே இருக்கும் பண்ணைப்புரத்தை சேர்ந்த பாண்டி என்பவரின் மகள் லட்சிதா. இவர் பெரியகுளம் அருகே இருக்கும் கைலாசபட்டியில் உள்ள தனியார் மகளிர் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்திருக்கின்றார். இவர் கல்லூரி வளாகத்தில் செயல்படும் மாணவிகளுக்கான விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்திருக்கின்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை விடுதியின் மூன்றாவது மாடிக்கு சென்று யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென மாடியிலிருந்து குதித்தார்.
சத்தம் கேட்டு சக மாணவிகள் பதறி அடித்துக்கொண்டு இங்கு ஓடி வந்தார்கள். லட்சிதா கீழே விழுந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்கள். கீழே விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு வலியால் துடித்தார். உடனே கல்லூரி நிர்வாகம் அவரை சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்கள்.
தற்போது அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இது பற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் கல்லூரியில் விசாரணை மேற்கொண்டார்கள். போலீசாரின் விசாரணையில் மாணவி லட்சிதாவுக்கு சென்ற இரண்டு நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. கல்லூரி நிர்வாகம் மாணவியின் பெற்றோருக்கு இதுகுறித்து தெரிவித்துள்ளார்கள். அவர்கள் இரண்டு நாட்களில் வந்து லட்சிதாவை அழைத்துச் செல்வதாக கூறியுள்ளார்கள். இந்த நிலையில் மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.