அதிமுக ஆட்சியில் நிதி மேலாண்மையில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக செல்வப் பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நிதி மேலாண்மையில் பல்வேறு முறை கேடுகள் நடந்துள்ளதாகவும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஆய்வு செய்யாமல் அவசரத்தில் பணிகளை தொடங்கி இருப்பதாகவும் சட்டமன்ற பொதுகணக்கு குழு குற்றம் சாட்டியுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற பொது கணக்கு குழுவினர் திருச்சியில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். திருச்சி அரசு மருத்துவமனை, சமூக நலத்துறை கீழ் கட்டப்பட்டு வரும் பணிபுரியும் மகளிருக்கான விடுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவம் கல்வி வேளாண்மை உள்ளிட்ட 14 துறைகளில் அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் திருச்சி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள், செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து குழுவினர் கேட்டறிந்தனர். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சட்டமன்ற பொதுகணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை ஆவினில் பால் தர கட்டுப்பாடு செய்ய 2016 ஆம் ஆண்டு1 கோடியே 62 லட்சம் ரூபாய் செலவில் கருவி வாங்கியதாகவும் ஆனால் அந்த கருவியை முறையாக பயன்படுத்தாமல் வீணடித்தது குறித்தும் விளக்கம் கேட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நிதி மேலாண்மையில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் எந்த ஆய்வும் செய்யாமல் அவசரகதியில் பல திட்டங்களை தொடங்கி இருப்பதாகவும் தெரிவித்தார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல குளறுபடிகள் நடந்து பல கோடி ஊழல் செய்யப்பட்டுள்ளதாகவும் இது குறித்து விசாரணை செய்து ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.