நசுவினி அணையை விரிவுபடுத்தி பாசன வசதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க தஞ்சை உதவி ஆட்சியருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு உதவி ஆட்சியர் பிரபாகர் தலைமை தாங்கினார். கம்யூனிஸ்ட் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சத்தியசாமி மற்றும் விவசாயிகள் நசுவினி ஆற்றில் இருக்கும் அணையை விரிவுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்கள். இதையடுத்து உதவி ஆட்சியர் அணையை நேரில் பார்வையிட்டார்.
அப்போது அங்கு வந்த கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர்கள் அணையை அகலமாக விரிவுபடுத்தி உயர்த்தி கட்டி நீரை அதிகமாக சேமிக்க வேண்டியதன் அவசியம் பற்றி விளக்கமாக எடுத்துரைத்தார்கள். இந்த அணையின் இரு பக்கமும் இருக்கும் வாய்க்கால்களின் மூலமாக கடைமடை பகுதியில் கோடை காலத்தில் ஏரி, குளங்களில் தண்ணீர் சேமித்து விவசாயம் செய்ய ஏதுவாக இருக்கும் எனவும் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்கள். இதை தொடர்ந்து உதவி ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.