வீட்டுக்கு குடிநீர் இணைப்பு கேட்டு முதியவர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அருகே இருக்கும் தீத்தாம்பட்டி வடக்கு தெருவில் வசித்து வரும் சங்குமணி பிள்ளை(80) என்பவர் நேற்று முன்தினம் காலை 7:00 மணி அளவில் கையில் விஷ பாட்டிலுடன் திடீரென குடிநீர் தொட்டியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்திருக்கின்றார். இது குறித்த தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள்.
அப்போது அவர் தன்னுடைய வீட்டிற்கு குடிநீர் குழாய் இணைப்பு கொடுக்காததால் தற்கொலை செய்யப் போவதாக தெரிவித்தார். இதன்பின் அங்கு பஞ்சாயத்து தலைவர் பெரியசாமி வரவழைக்கப்பட்டார். அவர் குடிநீர் இணைப்புக்கு டெபாசிட் தொகை ரூபாய் 1206 செலுத்தினால் உடனடியாக இணைப்பு வழங்குவதாக கூறினார். இதை அடுத்து அவரின் மகன் டெபாசிட் தொகையை செலுத்தியதையடுத்து குடிநீர் இணைப்பு கொடுக்கும் பணி ஆரம்பமானது. இதன்பின் தீயணைப்பு வீரர்கள்,போலீசார் அவரை கீழே இறக்கி அறிவுரை வழங்கி வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.