ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.
தமிழ் சினிமா உலகில் பிரபல நகைசுவை நடிகராக வலம் வந்த சந்தானம் தற்போது ஹீரோவாக வலம் வருகின்றார். இவர் தற்போது ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ரியா சுமன், சுருதி ஹரிஹரன், முனிஸ்காந்த், புகழ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை மனோஜ் பிதா இயக்கியுள்ளார்.
இத்திரைப்படம் நேற்று வெளியாகியுள்ளது. தற்போது இப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம். ஜமீன்தாருக்கும் இந்துமதி என்ற பெண்ணிற்கும் பிறக்கும் குழந்தை தான் சந்தானம். ஆனால் ஜமீன்தார் இந்துமதியை திருமணம் செய்து கொள்ளாததால் சிறுவயதில் இருந்தே சந்தானமும் அவரின் தாயும் பல அவமானங்களை சந்திக்கின்றார்கள். முதல் மனைவி மற்றும் அவரது மகன்களும் சந்தானத்தையும் அவரது தாயையும் அவமானப்படுத்திக் கொண்டே இருக்கின்றார்கள். இதன்பின் நகரில் நடக்கும் சிறு சிறு தவறுகளை கண்டுபிடிக்கும் டிடெக்டிவாக சந்தானம் மாறுகின்றார்.
சிறு சிறு தவறுகளை கண்டுபிடிக்கும் இவர் பெரிய டிடெக்டிவாக மாற வேண்டும் என்ற ஆசையில் இருக்கும்போது தன்னுடைய தாயின் மரண செய்தி அறிந்து ஊருக்கு செல்கின்றார். ஊருக்கு செல்வதற்குள் அவரின் தாயின் இறுதிச்சடங்கை சந்தானம் இல்லாமலேயே செய்து விடுகின்றார்கள். இதன் பின்னர் தந்தை ஜமீன்தாரின் சொத்தில் இரண்டாம் மனைவிக்கும் பங்கு இருப்பதால் இவரும் அதற்காக அந்த கிராமத்திலேயே தங்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. அப்போது அந்த கிராமத்தில் திடீர் திடீரென பல மரணங்கள் நடக்கின்றது.
இதனை கண்டுபிடிக்க சந்தானம் ஆரம்பிக்கின்றார். இதை அறிந்த எதிரிகள் அவரை திசை திருப்ப முயற்சிக்கின்றார்கள். இதனால் எதிரியின் வலையில் சந்தானம் சிக்கி அதிலிருந்து மீண்டு வந்தாரா? இந்த மரணங்களுக்கான காரணம் யார்? மர்ம மரணங்களை சந்தானம் எப்படி கண்டுபிடித்தார்? என்பதே படத்தின் மீதி கதையாகும். படத்தில் சந்தானம் அவரின் நடிப்பின் மூலம் கதையை தாங்கி பிடிக்கின்றார். நகைச்சுவையான நடிப்பும் இயல்பான வசனங்களும் கதைக்கு கூடுதல் பலம் சேர்க்கின்றது. ஹீரோயினாக நடித்திருக்கும் ரியா சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
குக் வித் கோமாளி புகழின் வேடம் கவனிக்கும்படியாக இல்லை. சந்தானத்தின் பெற்றோர்களாக நடித்திருப்பவர்கள் அவர்களின் பணியை சிறப்பாக செய்துள்ளார்கள். படத்தில் டிடெக்டிவ் திரைப்படங்களுக்கான விறுவிறுப்பும் சுவாரசியமும் இல்லை. படத்தில் நடிப்பவர்கள் தேர்வு சரியாக இருப்பினும் படத்தில் ஏதோ ஒன்று விலக வைக்கின்றது. ஒளிப்பதிவாளர் தனது பணியை கணக்கச்சிதமாக செய்துள்ளார். யுவன் சங்கர் ராஜாவின் பாடல்களும் பின்னணி இசையும் ரசிக்கும் வண்ணம் உள்ளது. மொத்தத்தில் விறுவிறுப்பு குறைந்த படமாக ஏஜென்ட் கண்ணாயிரம் அமைந்துள்ளது.