விபரீத முயற்சியால் பத்தாம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே இருக்கும் மகிபாலன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சாலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் ரமேஷ். பத்தாம் வகுப்பு படிக்கும் ரமேஷ் நேற்று முன்தினம் காலை பள்ளிக்கு செல்வதற்கு தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டில் குளிப்பதற்காக தண்ணீர் மோட்டார் ஸ்விட்சை போட்டு இருக்கின்றார். ஆனால் மோட்டார் ஓடாததால் அருகில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து மோட்டார் உள்ளே இருக்கும் மின்விசிறியை தட்டி இருக்கின்றார்.
இந்த விபரீத முயற்சியால் எதிர்பாராவிதமாக ரமேஷை மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் ரமேஷ் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து மயக்கம் அடைந்த ரமேஷை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மாணவன் ஏற்கனவே உயிர் இழந்து விட்டதாக தெரிவித்தார்கள். ரமேஷின் உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுத சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.