சிறப்பு சுருக்கத் திருத்தம் முகாமில் பணியில் இல்லாத 13 வாக்குச்சாவடி அலுவலர்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவிட்டார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகமானது 1038 இடங்களில் நடைபெற்றது. பல்வேறு இடங்களில் நடைபெற்ற இந்த சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வாக்குச்சாவடி நிலையத்தில் பணியில் இல்லாத வாக்குச்சாவடி அலுவலர்களை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டார்.
அதன்படி திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்கள் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் பணிக்கு வராத 13 வாக்கு சாவடி நிலைய அலுவலர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்கள். இனி நடைபெற இருக்கும் சிறப்பு முகாம் நாட்களில் பணிபுரியாத வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி மைய அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்திருக்கின்றார்.