Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“200 ரூபாய் கொடுத்தாதான் குளுக்கோஸ் ஏற்ற முடியும்”…. இளைஞர் கூறிய புகார்… எம்.எல்.ஏ அதிர்ச்சி…!!!

மருத்துவமனையில் இளைஞர் கூறிய புகாரால் எம்எல்ஏ அதிர்ச்சி அடைந்தார்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி அரசு மருத்துவமனையில் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தி.வேல்முருகன் நேற்று மதியம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நோயாளிகளிடம் அவர் குறைகளை கேட்டு அறிந்தபோது இளைஞர் ஒருவர் ஓடி வந்து புகார் ஒன்றை கூறினார். அவர் கூறியுள்ளதாவது, காய்ச்சலால் பாதிக்கப்பட்ட எனது உறவினரை சிகிச்சைக்காக அழைத்து வந்தேன். அப்போது டாக்டர் உடனடியாக குளுக்கோஸ் செலுத்த வேண்டும் என கூறினார். இதன்பின் குளுக்கோஸ் செலுத்தும் வார்டுக்கு அழைத்துச் சென்றேன்.

அங்கிருந்த பெண் ஊழியர் ரூபாய் 200 கொடுத்தால்தான் குளுக்கோஸ் ஏற்ற முடியும் என கூறினார். இதனால் சில மணி நேரம் தயங்கி நின்ற நான் பின் வேறு வழியில்லாமல் லஞ்சமாக 200 ரூபாய் கொடுத்தேன். பணம் கொடுத்த பிறகு குளுக்கோஸ் ஏற்றினார்கள். இது போலவே ஊசி போடுவதற்கும் சிகிச்சை செய்வதற்கும் பணம் கேட்கின்றார்கள் .ஏழை எளிய மக்கள் தான் அரசு மருத்துவமனைக்கு வருகின்றோம். ஆனால் இங்கே இப்படி நடந்தால் நாங்கள் என்ன செய்வது என அவரிடம் கூறினார்.

இதன்பின் எம்எல்ஏ அதிர்ச்சி அடைந்து தலைமை மருத்துவரை அழைத்து பேசினார். அப்போது எம்.எல்.ஏ கூறியதாவது, மருத்துவமனையில் சிகிச்சை பெற வரும் நோயாளிகளிடம் மருத்துவ ஊழியர்கள் பணம் வாங்குவதாக எனக்கு ஏற்கனவே புகார் வந்ததன் அடிப்படையில் தான் நான் இங்கே ஆய்வு மேற்கொண்டேன். தற்போது இந்த வாலிபரின் புகார் மூலம் இது உண்மை என தெரிய வந்திருக்கின்றது. இனி நோயாளிகளிடம் பணம் வாங்கக்கூடாது. இது போன்ற புகார்கள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள் என தெரிவித்தார். அதற்கு தலைமை மருத்துவர் இங்கு யாரும் நோயாளிகளிடம் பணம் வாங்குவதில்லை. அப்படி யாரேனும் வாங்குவது தெரியவந்தால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Categories

Tech |