மதுரை வீரன் கோவிலை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வெண்ணந்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆட்டையாம்பட்டி பிரிவு அருகே சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற 2008 ஆம் வருடம் நில அளவீடு செய்த போது சாலையின் இரு புறங்களிலும் மரக்கன்றுகள் நடுவதற்கு இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை மரங்கள் நடவில்லை. இதனால் அப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்கு இருக்கின்றது. இதனிடையே ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில் இருந்து மசக்காளிபட்டி பேருந்து நிறுத்தம் இடையே சாலையோரமாக மதுரை வீரன் கோவில் இருக்கின்றது. இந்த கோவில் சாலையின் இருபுறமும் மரக்கன்றுகள் நடுவதற்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் இருப்பதால் கோவிலை அகற்ற நெடுஞ்சாலை துறையினர் கூறியதாக சொல்லப்படுகின்றது.
இதையறிந்த அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து 50க்கும் மேற்பட்டோர் சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டையாம்பட்டி பிரிவு-மசக்காளிப்பட்டி இடையே சாலையில் திரண்டார்கள். மேலும் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின் இதுபற்றி தகவல் அறிந்த வெண்ணந்தூர் போலீசார், தாசில்தார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள். இதன்பின் பொதுமக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டதால் சாலை மறியல் கைவிடப்பட்டது. சாலை மறியல் காரணமாக அங்கு சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு குள்ளானது.