திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனு அளித்தனர். இந்நிலையில் ஒரு பெண் தனது உறவினர்களுடன் திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். இதனை பார்த்த போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்திய போது அவர் தேனி மாவட்டத்தில் உள்ள தென்கரையை சேர்ந்த சுதா என்பது தெரியவந்தது. அப்போது அவர் கூறியதாவது, கடந்த 2013-ஆம் ஆண்டு எனது மகன் விக்னேஸ்வரன் வெல்டிங் பட்டறையில் வேலை பார்த்தார்.
அப்போது ஏற்பட்ட விபத்தில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு எனது மகன் மாற்றுதிறனாளி ஆனார். இந்நிலையில் தொழிலாளர் நல நீதிமன்றத்தில் எனது மகனுக்கு இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் வெல்டிங் பட்டறை உரிமையாளர் இழப்பீடு தொகை வழங்குமாறு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் 9 ஆண்டுகள் ஆகியும் இதுவரை இழப்பீடு வழங்கவில்லை. எனவே இழப்பீடு தொகை வழங்க கலெக்டர் பரிந்துரைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். அவரை சமாதானப்படுத்தி போலீசார் கலெக்டரிடம் மனு கொடுக்க வைத்தனர்