Categories
கபடி விளையாட்டு

9-வது புரோ கபடி லீக்போட்டி: மிகப்பெரிய பலமாக பவன் செராவத்…. இந்த சீசனில் தமிழ் தலைவாஸின் நிலை என்ன?….!!!!

12 அணிகள் விளையாடும் 9வது புரோ கபடி லீக்போட்டிகள் வரும் அக்டோபர் 7ம் தேதி முதல் துவங்கவுள்ளது. டிசம்பர் மாதம் இறுதி வரையிலும் நடைபெற இருக்கும் இந்த தொடருக்கான லீக்சுற்று ஆட்டங்கள் பெங்களூரு, புனே, ஐதராபாத் போன்ற 3 நகரங்களில் நடத்தப்பட இருக்கிறது. இத்தொடருக்கான 5-வது சீசனில் தமிழகத்தின் தலைநகரான சென்னையை மையமாக  கொண்டு உருவாக்கப்பட்ட அணி தமிழ் தலைவாஸ். சென்ற 4 சீசன்களில் ஒரு முறைகூட பிளேஆப் சுற்றுக்கு தகுதிபெறாத இந்த அணி, அதனை மாற்றும் முயற்சியில் இந்த முறை ஒரு வலுவான அணியைக் கட்டமைத்து இருக்கிறது.

அதிலும் குறிப்பாக சென்ற 3 சீசன்களில் பிகேஎல்லின் வெற்றிகரமான ரைடராக வலம்வரும் பவன்குமார் செஹ்ராவத்தை சுற்றி ஒரு திறன் மிகுந்த அணி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த தமிழ்தலைவாஸ் அணியானது சென்ற தொடரின் போது சிறந்த முறையில் செயல்பட்டது. எனினும் இதுவரையிலும் அவர்கள் பெரிய போட்டிகளில் வெற்றி பெறவில்லை. வர இருக்கும் சீசனில் பட்டத்தை வெல்ல ஏலத்தின்போது தரமான வீரர்களை வாங்குவதில் அவர்கள் கவனம் செலுத்துவதற்கு இதுவே காரணமாக இருந்தது. இந்த சீசன் துவங்குவதற்கு முன்பு தமிழ் தலைவாஸினுடைய பலம் மற்றும் பலவீனம் குறித்து இங்கு நாம் தெரிந்துகொள்வோம்.

பவன்செராவத் அணியின் மிகப் பெரிய பலம்:

தமிழ் தலைவாஸின் மிகப் பெரிய பலம் இம்முறை பவன்செராவத்தான். அவரது வருகையால் ரெய்டிங் பிரிவிலுள்ள பிற அணிகளுக்கு அந்த அணி கடும் சவாலை கொடுக்கும். 9வது சீசனின் ஏலத்தில் தலைவாஸ் பவன்செராவத்தை லீக் வரலாற்றில் அதிக விலை உடைய வீரராக ரூபாய.2.26 கோடிக்கு ஏலமெடுத்தது. போட்டியின் வரலாற்றில் பவன் மிகப் பெரிய தொகையைப் பெற்று இருப்பதால், அதனை தன் செயல்திறன் வாயிலாக நிரூபிக்கும் பொறுப்பு அவருக்கு இருக்கும். பவன் சென்ற 3 சீசன்களில் சிறந்த ரைடராக இருந்துவருகிறார். அதுமட்டுமின்றி தலை வாஸை முதன் முறையாக பட்டத்துக்கு நெருக்கமாக அழைத்துபோகும் திறமை அவருக்கு இருக்கிறது. பவன் தன் ரிதத்தில் நிலைத்து இருந்தால், அணியின் ரசிகர்கள் முதன் முறையாக மகிழ்ச்சியாக இருக்கும் வாய்ப்பைப் பெறலாம்.

சென்ற சீசனில் 2வது சிறந்த டிபெண்டராக இருந்த சாகர் மீண்டுமாக தமிழ் தலைவாஸால் தக்கவைக்கப்பட்டு இருக்கிறார். அவர் சென்ற சீசனில் 8 ஹை-5கள் உள்பட 83 டேக்கிள் புள்ளிகளை எடுத்தார். துவக்கத்தில் அவர் சிறப்பாக விளையாடவில்லை என்றாலும், போட்டிகள் முன்னேறிய போது அவர் தன் வேகம் நிறைந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். தமிழ்தலைவாஸ் இம்முறை சாகர்மீது பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறது. அவர்தான் மிகவும் ஆபத்தான டிபெண்டர் என்பதை நிரூபிப்பார் என எதிர்பார்க்கலாம். இதற்கிடையில் பவன் செஹ்ராவத்துக்கு சொந்தமாக ஆட்டங்களை வெல்லும் திறன் இருப்பினும், அவருக்கு இன்னும் மற்றவீரர்களின் ஆதரவு தேவைப்படும். ஆனால் அவரைத் தவிர்த்து அணியில் வேறு பெரிய ரைடர்கள் இல்லை.

அவரின் உதவிரெய்டராக அஜிங்க்யா பன்வார் இருப்பார். எனினும் துரதிர்ஷ்டவசமாக பவன் காயமடைந்தாலோ (அல்லது) அவரது பார்ம் நன்றாக இல்லாமலோ இருந்தால் ரெய்டிங் பொறுப்பை அவரே கையாளும்படி அஜிங்க்யா பன்வாருக்கு அதிக அழுத்தம் கொடுக்கும். அஜிங்க்யா இதுவரையிலும் அசிஸ்ட் ரெய்டராகவே இருந்து இருக்கிறார். ஆகவே பிரதான ரைடரின் பொறுப்பைக் கையாள்வது அவருக்கு சவாலாக இருக்கலாம். தமிழ் தலைவாஸ்-ன் முக்கியமான குறைகளில் இதுவும் ஒன்றாகும். அவர்கள் மற்றொரு ரைடரை அணியில் சேர்த்து இருக்கலாம். அதே நேரம் டிபெண்ஸிலும் அந்த அணியானது சாகரையே அதிகம் நம்பி இருக்கிறது. பவன் செஹ்ராவத்தை 2 கோடிக்கு ஏலம் எடுத்ததால், தமிழ் தலைவாஸ் மற்ற இடங்களுக்குரிய வீரர்களை வாங்கிவதில் சிரமம் ஏற்பட்டது. அத்தகைய நிலையில் சாகர் தோல்வியுற்றால் அணியின் டிபெண்ஸ் சரிந்து விடும்.

Categories

Tech |