லிபியாவில் 9 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து கொண்டிருந்த உள்நாட்டுப் போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
லிபியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு சர்வாதிகாரி கடாபி ஆட்சியில் இருந்தபோது கொல்லப்பட்டார். அதனால் அந்நாட்டில் உள்நாட்டு போர் தொடங்கியது. அந்நாட்டின் ஆட்சியை கைப்பற்றுவதற்கு பல்வேறு ஆயுதக் குழுக்களும் மோதலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் குறிப்பாக, கொல்லப்பட்ட கடாபியின் ஆதரவாளர் கலிபா கத்தார் தலைமையிலான ஆயுதக்குழு நாட்டின் பல்வேறு பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருக்கிறது. மேலும் இந்த குழுவினர், சர்வதேச அங்கீகாரத்தை கொண்ட அரசு படைகளுடன் தீவிரமாக மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசின் வசம் இருக்கின்ற தலைநகர் திரிபோலியை கைப்பற்றும் எண்ணத்தில் கலிபா கப்தார் தலைமையிலான ஆயுதக் குழுவினர் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து பயங்கர தாக்குதலை நடத்தி வருகின்றனர். லிபியாவில் நடந்த உள்நாட்டுப் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். மேலும் கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரசு படையினருக்கு இடையே நடந்து கொண்டிருக்கும் இந்த மோதலில் பல்வேறு வெளிநாட்டு படையினரும் இரு தரப்பினருக்கும் ஆதரவாக மோதலில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தொடர்ந்து ஒன்பது ஆண்டுகளாக நடந்து வந்த இந்த உள்நாட்டுப் போரை உடனடியாக நிறுத்துகிறோம் என ஐநா சபையால் அங்கீகரிக்கப்பட்ட திரிபோலியை தலைநகராகக் கொண்ட லிபியா அரசு அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து கடாபியின் ஆதரவு கிளர்ச்சியாளர் கலிபா கத்தார் தலைமையிலான கிளர்ச்சியாளர்கள் குழுவும் தாங்களும் லிபியாவில் மோதலை நிறுத்திக் கொள்வதாக தெரிவித்துள்ளனர். எண்ணெய் வளமிக்க நாடாக கருதப்படும் லிபியாவில் விரைவில் பொதுத் தேர்தல் நடக்க உள்ளது. அந்தத் தேர்தலுக்கு இரு தரப்பினரும் விருப்பம் கூறியுள்ளனர். அதனால் தற்போது நடந்து கொண்டிருக்கும் உள்நாட்டுப் போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு கொண்டுவர முதல் முயற்சிக்கு ஐநா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் வரவேற்பு அளித்துள்ளன.