டத்தே புயலில் சிக்கி மாயமான 9 மீனவர்களை கண்டுபிடிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய தேசிய மீனவர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்திய தேசிய மீனவர் சங்கத் தலைவர் ராஜேந்திர நாட்டார் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருந்ததாவது “நாகையில் சமந்தான்பேட்டை பகுதியில் மணிகண்டன் என்ற மீனவருக்கு சொந்தமான விசைப்படகில் அவருடைய தந்தை இடும்பன் மற்றும் அண்ணன் மணிவேல், நாகூர் பட்டினச்சேரி பகுதியைச் சேர்ந்த தினேஷ், இளஞ்செழியன், அக்கரைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரவீன் உள்பட 9 மீனவர்கள் கேரள மாநிலத்தில் உள்ள ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்று உள்ளனர்.
அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது டத்தே புயல் காரணமாக எழுந்த ராட்சத அலையில் விசைப்படகு சிக்கி தூக்கி வீசப்பட்டு மீனவர்கள் மாயமாகியுள்ளனர். இதுகுறித்து சமந்தான்பேட்டை மீனவ பஞ்சாயத்தார் கடந்த 15ஆம் தேதி கலெக்டரை சந்தித்து 9 மீனவர்களின் நிலை குறித்தும் மாநில அரசு மீனவர்களை மீட்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என மனு கொடுத்துள்ளோம்.
ஆனால் சமந்தான்பேட்டை மீனவர்கள் குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகவில்லை. இதனால் மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். எனவே கடலில் மாயமான சமந்தான்பேட்டை மீனவர்களை கண்டுபிடிக்க மத்திய மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அதில் கூறப்பட்டிருந்தது.