அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், நாங்கள் கொள்கை பகைவர்களை விரட்டி அடிப்பதற்காக உறுதியேற்று இந்த கூட்டணியில் கைகோர்த்து இருக்கிறோம். 234 தொகுதிகளிலும் திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். வரலாறு காணாத வெற்றியை திமுக கூட்டணி பெற இருக்கிறது.திராவிட முன்னேற்ற கழக தலைவர் தளபதி முக. ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து,
சனாதனிகளுக்கு இங்கே எக்காலத்திலும் வேலை இல்லை என்று விரட்டி அடிக்க கூடிய வகையில் பத்தாண்டு கால ஆட்சி திட்டத்தை வரையறுத்துக் கொண்டு திமுக இந்த கூட்டணியை வழிநடத்துகிறது . அதற்கு நாங்கள் என்றென்றைக்கும் உற்ற துணையாக இருப்போம், வெல்வோம், சமூக நீதியை, ஜனநாயகத்தை பாதுகாப்போம். திமுக கூட்டணிக்கும் ஆதரவான ஒரு சூழல் அரசியல் களத்தில் இருப்பதை அறிந்து கொண்டு, மக்களை மாயமான வித்தைகளின் மூலம் போலி வாக்குறுதிகளின் மூலம்,
இலவச அறிவிப்புகள் மூலம் மயக்கி ஏமாற்றி விடலாம் என்கிற எண்ணத்தின் அடிப்படையில் அதிமுக இத்தகைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. அவர்கள் எத்தனை முயற்சிகளை மேற்கொண்டாலும், என்னென்ன வகையான ஆயுதங்களை… அஸ்திரங்களை பயன்படுத்தினாலும் வீழ்வது உறுதி. திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆள்வது உறுதி என தெரிவித்தார். திமுகவில் 90 விழுக்காடு இந்துக்கள் தான் உள்ளனர். எல்லா கட்சிகளிலும் இந்துக்கள் தான் இருக்கிறார்கள்.
இந்துக்கள் இல்லாத ஒரு கட்சி எப்படி நடத்த முடியும் ? திமுக மட்டுமல்ல விடுதலை சிறுத்தைகள் கட்சியிலும் பெரும்பான்மை மக்கள் இந்துக்கள் தான். இந்து சமூகத்திற்கு…. இந்து மக்களுக்கு எதிராக செயல்படுகின்றோம் என்கிற தோற்றத்தை பிஜேபி திரும்ப ஏற்படுத்த முயற்சிக்கிறது.
அவர்கள் முன்வைக்கக்கூடிய சனாதன அரசியலை நாங்கள் எதிர்க்கிறோம். மதவெறி அரசியலை நாங்கள் எதிர்க்கிறோம், அரசியலுக்குள் ஆன்மீகத்தை புகுத்தி, மத அடிப்படையில் மக்களை பிளவுபடுத்துகிற சமூக பிரிவினைவாதத்தை நாங்கள் எதிர்க்கிறோம், முரண்பாடுகளை கூர்மை படுத்தி மக்களிடையே மோதலை உண்டு பண்ண பிஜேபி அரசியல் ஆதாயத்திற்காக முயற்சிக்கிறது, அந்த முயற்சியை நாங்கள் எதிர்க்கின்றோம் என திருமாவளவன் தெரிவித்தார்.