மருத்துவரின் வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அருகே நடுக்காட்டு இசக்கியம்மன் கோவில் பகுதியில் ஜலதா தேவகுமாரி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவருடைய கணவர் மற்றும் மகன் இறந்து விட்டனர். இந்த மருத்துவரின் மகளுக்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் ஜலதா தேவகுமாரி வழக்கம்போல் இரவு நேர பணிக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட சில மர்ம நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து விட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து மருத்துவர் ஜலதா தேவகுமாரி பணி முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜலதா தேவகுமாரி வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 90 பவுன் தங்க நகைகள் மற்றும் 1,50,000 பணம் ஆகியவை திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து ஜலதா தேவகுமாரி நேசமணி நகர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வீட்டில் பதிவான தடயங்களை சேகரித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.