எஸ்.பி. பாலசுப்பிரமணியம் 90% மயக்க நிலையிலிருந்து மீண்டுள்ளார் என அவரின் மகன் கூறியுள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் எஸ்.பி.பி நினைவு திரும்பிய சைகை மூலமாக தன்னிடம் பேசியதாக அவரின் மகன் எஸ்.பி.பி.சரண் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று இரவு வெளியிட்ட வீடியோ பதிவில், ” கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக எனது தந்தையை என்னால் பார்க்க இயலவில்லை. ஆனால் இன்று அப்பாவை சென்று பார்த்தேன். மருந்து செலுத்தப்பட்டு இருந்ததால் சற்று மயக்க நிலையில் இருந்தாலும், ஓரளவு விழிப்புடன் இருந்தார். என்னைப் பார்த்தவுடன் அடையாளம் கண்டு கொண்டார்.
உடல் நிலை எப்படி இருக்கிறது என்று கேட்டேன். அனைவரின் பிரார்த்தனை மற்றும் வாழ்த்துக்களை குறித்து அவரிடம் கூறினேன். அவர் மன தைரியத்துடன் இருந்து விரைவில் மீண்டு வர வேண்டும் என்று கூறினேன். அதற்கு அவர் தனது கட்டை விரலை உயர்த்தி காட்டினார். நான் எப்படி இருக்கிறேன், அம்மா எப்படி இருக்கிறார் என்று சைகை மூலமாக கேட்டார். அப்பாவை கண்டதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அவருக்கு என்னைப் பார்த்ததில் மிகுந்த சந்தோசம். இனிமேல் தினமும் அவரை சென்று பார்ப்பேன். அவரது அறையில் ஒழிக்கப்பட்டு வரும் பாடல்கள் அப்பாவுக்கு நன்றாக கேட்கிறது.
அவரது படுக்கை அருகில் கடவுள் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. அனைவரின் பிரார்த்தனைகளுக்கும் எங்கள் குடும்பம் மிகுந்த நன்றிக்கடன் பட்டுள்ளது. அப்பா விரைவில் மீண்டு வந்து எல்லோரையும் சந்திப்பார் என்ற நம்பிக்கை இருக்கின்றது” என்று கூறி வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் அவர் இன்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ” எனது தந்தையின் உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் 90% மயக்க நிலையிலிருந்து மீண்டுள்ளார். விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.