உழைப்பாளி என்ற சொல்லுக்கு அர்த்தமாக வாழ்ந்து வருகிறார். கோவை மாவட்டம் தேக்கம்பட்டி சேர்ந்த மூதாட்டி ஒருவர் 90 வயதிலும் தளராமல் துப்புரவு பணிக்கு சென்று தனது வாழ்க்கைக்கு தேவையான தொகையை சம்பாதித்து பிறருக்கு முன்மாதிரியாக வாழ்ந்து வரும் பாட்டி பற்றிய ஒரு செய்தித் தொகுப்பை பார்க்கலாம்.
தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கண்ணாத்தாள் 90 வயதிலும் தினசரி அதிகாலையிலேயே தூய்மைப் பணிக்கு புறப்படுகிறார். முதலில் கோயில் வளாகம் அடுத்து அரசு நடுநிலை பள்ளியும், அவரது வருகையை எதிர்பார்த்து இருக்கின்றன. யாரும் வருவதற்கு முன்பாகவே ஆண்டவன் குடியிருக்கும் ஆலயத்தையும், கல்வி கோவிலையும் கண்ணாடியாக மாற்றுகிறார் இந்த பாட்டி. கவனித்துக்கொள்ள வாரிசுகள் இருந்தாலும் தள்ளாத வயதிலும் உழைத்து பிழைக்க வேண்டும் என்ற உறுதியான நோக்கத்தில் அவர் தளர்ந்து போவதில்லை. முன்மாதிரியாக விளங்கி உழைப்பின் பெருமையை கற்றுத்தரும் ஆசிரியர் பணியையும் இவர் செய்வதாக புகழ்கின்றனர் பள்ளி ஆசிரியர்கள். கல்வி ஆண்டின் புதுமுகங்களுக்கும், படிப்பை முடித்து சென்றவர்களுக்கும், இந்த பாட்டி ஓர் அதிசய பிறவி.
ரிஷிமூலம், நதிமூலம் போல இந்த உழைப்பாளிக்கும் ஒரு பூர்வ கதை உண்டு என் வீடு அசுத்தமாகயுள்ளது போய் சுத்தம் செய் என்று கனவில் பெருமாள் வந்து சொன்னதை இவர் துடைப்பத்தை கையில் எடுக்க காரணமானது. உதவி செய்ய பலர் முன்வந்தாலும் கைநீட்ட மறுக்கும் கண்ணாத்தாள் பாட்டி உழைப்புக்கு தகுந்த கூலியை மட்டுமே ஆசிரியர்களிடம் பெற்றுக் கொள்கிறார். தன் கையை நம்பும் இந்த பாட்டி சொற்ப வருமானத்திலும் வாங்கிக் கொடுக்கும் பிஸ்கட்டுக்காக தன்னை நம்பி காத்திருக்கும் செல்ல நாயின் பசியாற்றிய பிறகே வீடு திரும்புகிறார். அடுத்த உதயத்தில் மீண்டும் பணியை துவங்கும் இந்த உழைப்பாளி பாட்டிக்கு ஓய்வு என்றால் என்னவென்றே தெரியாது.