ஆஸ்திரியாவில் 90 வயது முதியவர் தன் உயிலில் இரண்டாம் உலக போரில் தன்னை காப்பாற்றிய கிராம மக்களுக்கு நன்கொடை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பிய நாடு ஆஸ்திரியாவில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 25 ஆம் தேதியில் கொண்டாடப்பட்ட கிறிஸ்துமஸ் தினத்தில் 90 வயதுடைய நபரான எரிக் ஸ்வாம் உயிரிழந்துள்ளார். அதன் பிறகு அவரால் எழுதி வைக்கப்பட்டிருந்த உயிலை படிக்கும்போது அதில் இரண்டாம் உலகப் போர் சமயத்தில் நாஜிக்களிடமிருந்து அவரையும் அவரின் குடும்பத்தினரையும் பல வருடங்களாக பாதுகாத்த பிரான்சில் இருக்கும் புகழ் வாய்ந்த கிராமமான லுசாம்பன்-சுர்-லிக்னன் என்ற கிராமத்திற்கு இரண்டு மில்லியன் யூரோக்களை அளிக்க வேண்டும் என்று எழுதியிருக்கிறார்.
மேலும் இதனை பயன்படுத்தி அந்த கிராமத்தில் வசிக்கும் குழந்தைகள் கல்வி மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பிற்கு உதவுங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது எரிக் ஸ்வாம் 13 வயது சிறுவனாக இருந்தபோது அவரின் குடும்பத்தாருடன் கடந்த 1943 ஆம் வருடத்தில் லுசாம்பன்-சுர்-லிக்னன் என்ற கிராமத்தில் இருக்கும் பள்ளி ஒன்றில் அந்த கிராம மக்களால் அடைக்கலமாக வைக்கப்பட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து கடந்த 1950ஆம் வருடம் வரை அந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள் அதே பள்ளியில் அவரை பாதுகாத்து வந்துள்ளனர். அதன்பின்பு மருத்துவம் கற்ற அவர் அந்த கிராமத்தைச் சேர்ந்த கத்தோலிக்க பெண் ஒருவரையே திருமணம் செய்து கொண்டார். மேலும் அந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள் இரண்டாம் உலகப் போர் சமயத்தில் சுமார் 2500 யூதர்களை இதே போல் காப்பாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.