வரும் நாடாளுமன்ற தேர்தலில் மொத்தம், 90 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருப்பதாக அறிவித்துள்ள தேர்தல் ஆணையம் இந்த முறை 8 கோடியே 40 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.
டெல்லியில் தேர்தல் அறிவிப்பை வெளியிட்ட இந்திய தேர்தல் அதிகாரி சுனில் அரோரா பள்ளித் தேர்வுகள்,மத ரீதியான விழாக்களை கவனத்தில் கொண்டு தேர்தல் தேதி முடிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். வாக்காளர் பட்டியல் சரியாக இருக்க நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் வரை வாக்காளர் பட்டியலில் திருத்தம் நடைபெறும் என்றும் கூறினார்.
அதேவேளையில் 23 மாநிலங்களில் 100% வாக்காளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் மொத்தம் 90 கோடி வாக்காளர்கள் இந்தியாவில் இந்த முறை வாக்களிக்க தகுதி பெற்ற்றிருப்பதாக குறிப்பிட்டார். இதில் 8 கோடியே 40 லட்சம் பேர் புதிய வாக்காளர்களாகவும், 18 முதல் 19 வயதுக்குள் 1, 1/2 கோடி வாக்காளர்கள் அடங்கும் என கூறப்பட்டுள்ளது. 1950 இந்த இலவச தொலைபேசி சேவை மூலம் புதிய வாக்காளர்கள் தங்களின் பெயர்களை சரிபார்த்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கடந்த தேர்தலில் 9 லட்சமாக இருந்த வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை இந்த தேர்தலில் 10 லட்சமாக உயர்த்தப்பட்டும் என்றும், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் இயந்திரம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் வேட்பாளர்களின் புகைப்படங்களும் இடம்பெற்றிருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து கட்டத்திலும் தேர்தல் நடவடிக்கை பார்வையாளர்கள் இருப்பார்கள் என்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் படிவம் 26ஐ தாக்கல் செய்யாவிட்டால் வேட்பு மனு நிராகரிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.