ஐரோப்பாவில் 2100 ஆம் வருடத்தில் வெப்ப அலையால் வருடத்திற்கு 90 ஆயிரம் மக்கள் வரை உயிரிழக்கலாம் என்ற அதிர்ச்சிகரமான தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஐரோப்பிய சுற்றுச்சூழல் கழகத்தால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை ஒன்றில், வெப்பமயமாதலால் மூன்று டிகிரி செல்சியஸ் அளவிற்கு வெப்பநிலை உயரும். அப்போது 2100 ஆம் வருடத்தில் கடும் வெப்ப அலை ஐரோப்பாவில் உண்டாகும். இதனால் வருடத்திற்கு 90 ஆயிரம் மக்கள் வரை உயிரிழக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது உலகளவில் 1.5 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை இருக்கிறது. இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 30 ஆயிரமாக உள்ளது. எனவே, இதற்கு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை எனில் இந்த நூற்றாண்டின் கடைசியில் உயிரிழப்பு எண்ணிக்கை உயர வழிவகுக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
காப்பீடு தரவுகளின் படி, கடந்த 1980 ஆம் வருடத்திலிருந்து 2020 ஆம் வருடம் வரை சுமார் 40 வருடங்களில் கடும் வெப்பநிலையால் 1.29 லட்சம் மக்கள் பலியாகி இருக்கிறார்கள். ஐரோப்பிய நாடுகளில் இந்த வருடத்தில் கடும் வெயிலில் மூன்றே மாதங்களில் சுமார் 15,000 மக்கள் வரை உயிரிழந்திருப்பதாக உலக சுகாதார மையம் தகவல் வெளியிட்டிருக்கிறது.
இருப்பினும், வெப்பநிலையால் உண்டாகும் உயிரிழப்புகளை தடுக்க முடியும் என்று ஐரோப்பிய சுற்றுச் சூழல் கழகம் தன் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. அந்த வகையில், வெப்பநிலையால் உண்டாகும் சுகாதார விளைவுகளை குறைப்பதற்கு வேலை நேரம் மற்றும் காலங்களை சிறிது மாற்றி சீரமைத்துக் கொள்வது, சுகாதார செயல்திட்டங்கள், சரியான கட்டிட வடிவமைப்பு மற்றும் கட்டுமானம், நகரங்கள் பசுமை மயமாக்கப்படல் ஆகியவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.