உடன்குடியில் ஊருக்குள் புகுந்த மிளாவை கயிறு கட்டி பிடித்ததால் பரிதாபமாக உயிரிழந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உடன்குடி அருகே இருக்கும் குலசேகரப்பட்டினம் அருகே அடர்ந்த காட்டுப்பகுதி இருக்கின்றது. இங்கே மிளா,மான் உள்ளிட்ட வனவிலங்குகள் இருக்கின்றது. இவை அவ்வப்போது உணவுக்காக ஊருக்குள் புகுந்து விடுகின்றது. இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பாக காட்டுப்பகுதியில் இருந்து மிளா ஒன்று ஊருக்குள் புகுந்தது. அப்போது அங்கே நின்று கொண்டிருந்த மாடுகளுடன் இரவு 10 மணி அளவில் உடன்குடி பஜார் பகுதிக்கு மிளா வந்தது. மிளா ஊருக்குள் சுற்றி திரிவதை பார்த்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்கள்.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மிளா வெளியே எங்கும் செல்ல முடியாத அளவிற்கு தடுப்பு வைத்தனர். பின் நள்ளிரவு 1 மணிக்கு வனத்துறையினர் கயிறு மூலமாக மிளாவை பிடிக்க நடவடிக்கை எடுத்தார்கள். அப்போது வனத்துறையினர் அதன் கழுத்தில் கயிறை சுருக்கு முடிச்சு போட்டு இழுத்தார்கள். இதில் எதிர்பாராத மிளா ஓடியதால் அதன் கழுத்து இறுக்கியது. இதன் பின் அங்கிருந்த கதவுகள் மீது மோதியது. இதனால் மிளா தலை, கழுத்து உடல் பகுதியில் காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தது. அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தது இதன் பின் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வனப்பகுதியில் புதைக்கப்பட்டது.