கைதிகளுடன் உறவினர்கள் பேசுவதற்கு சேலம் மத்திய சிறையில் இன்டர்காம் தொலைபேசி வசதி செய்யப்பட்டு இருக்கின்றது.
சேலம் மத்திய சிறைச்சாலையில் 800க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளார்கள். சிறையில் இருக்கும் கைதிகளை சந்திப்பதற்காக அவர்களின் உறவினர்கள் கொடுக்கும் மனுக்களின் அடிப்படையில் ஏராளமானோர் அனுமதிக்கப்படுகின்றார்கள். அப்போது கைதிகள் ஒருபுறமும் உறவினர்கள், வக்கீல்கள் மற்றொருபுறமும் நின்று பேசுகின்றார்கள். இடைப்பட்ட தூரம் அதிகமாக இருப்பதால் இருதரப்பினரும் கத்தி பேசுகின்றனர்.
இந்நிலையில் கம்பி வலையில் உள்ளே இருக்கும் கைதி தன்னுடைய உறவினரின் முகத்தை பார்த்து பேசும் வகையில் இன்டர்காம் தொலைபேசி தமிழகத்தில் இருக்கும் சிறைகளில் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் சத்தமாக பேச தேவை இல்லை. ஏற்கனவே தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரையில் இந்த வசதி இருக்கின்ற நிலையில் தற்போது சேலம் மத்திய சிறையிலும் நேற்று முன்தினம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் ஆய்வு செய்தார்.