பழமை வாய்ந்த அகஸ்தியா திரையரங்கம் இடிக்கப்பட்டு வருகின்றது.
சென்னை மாவட்டத்தில் உள்ள வடசென்னை 1967-ம் வருடம் திறக்கப்பட்ட திரையரங்கம் அகஸ்தியா திரையரங்கம். இந்த திரையரங்கில் ஒரு நாளைக்கு நான்கு காட்சிகள் திரையிடப்பட்டது. அந்த பகுதியில் கூலி தொழிலாளர்கள் அதிகம் என்பதால் பெண்கள் பெரும்பாலானோர் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு சினிமா பார்க்க காலை 10 மணி காட்சிக்கு வருவார்கள். அவர்களுக்கு டிக்கெட் விலையில் சலுகை வழங்கப்பட்டது.
இந்த திரையரங்கில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினிகாந்த், கமல் தொடங்கி தற்போதைய நடிகர்கள் விஜய், அஜித், சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் வரை என நான்கு தலைமுறை நடிகர்களின் படங்கள் திரையிடப்பட்டிருக்கின்றது. சென்ற 2015 ஆம் வருடம் மெட்ரோ ரயில் பணிக்காக தண்டையார்பேட்டை-திருவொற்றியூர் நெடுஞ்சாலை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டதால் அகஸ்தியா தியேட்டரின் முன் பகுதி மெட்ரோ ரயில் பணிக்காக இடம் எடுக்கப்பட்டது. இதனால் வாகனம் நிறுத்தும் வசதி, கூரை என குறுகலான பாதை உள்ளிட்ட அசௌகரியங்கள் ஏற்பட்டது.
இதன் காரணமாக ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்தது. கொரோனா காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் தொழிலாளர்கள் வேறு வேலையை த் தேடிச் சென்று விட்டார்கள். இதனால் கடும் நஷ்டத்தை சந்தித்ததால் தியேட்டர் நிரந்தரமாக மூட முடிவு செய்யப்பட்டது. சென்ற 2 வருடங்களாக காட்சிகள் நிறுத்தப்பட்டு தியேட்டர் மூடிக்கிடந்த நிலையில் தற்போது தியேட்டர் இடிக்கப்பட்டு வருகின்றது. சென்னையின் அடையாளமாக திகழ்ந்த அகஸ்தியா திரையரங்கம் தனது தோற்றத்தை இழந்து வருவதை பார்க்கும் ரசிகர்கள் தூரத்தில் நின்று கண்ணீர் விட்டபடி செல்கிறார்கள்.